×

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 59 அடி உயர நினைவுத்தூண் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: ரூ.1.95 கோடியில் காமராஜர் சாலை மற்றும் சிவானந்தா சாலை சந்திப்பில் அமைக்கப்பட்ட 59 அடி உயரம் கொண்ட 75வது சுதந்திர தின நினைவுத்தூணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நாட்டின் 75வது சுதந்திர தின வைர விழாவையொட்டி சுதந்திர தின நினைவுத்தூண் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் காமராஜர் சாலை மற்றும் சிவானந்தா சாலை சந்திப்பில் நினைவுத்தூண் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து நினைவுத்தூண் அமைக்கும் பணிக்காக மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, சிஎம்டிஏ, கடற்கரை ஒழுங்குறை மண்டல ஆணையம், மாவட்ட கலெக்டர், வருவாய்த்துறை உட்பட 6 துறைகளிடம் அனுமதி பெறப்பட்டன.காமராஜர் சாலை மற்றும் சிவானந்தா சாலை சந்திப்பில் ரூ.1.95 கோடியில் நினைவுத்தூண் அமைக்கும் பணிக்காக பிஎஸ்கே என்கிற ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. இந்த நிறுவனம் சார்பில் கடந்த 3ம் தேதி நினைவுத்தூண் அமைக்கும் பணி தொடங்கியது. இதை விரைந்து முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து இணை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. குழுவின் கண்காணிப்பின் பேரில் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் இரவு, பகலாக நினைவுத்தூண் அமைக்கும் பணியை மேற்கொண்டனர். இந்த நினைவுத்தூண் 42 அடி உயரம் கொண்ட துரு பிடிக்காத உலோத்தினால் ஆனது. இதன் அடித்தளம் கான்கிரீட்டினால் உருவாக்கப்பட்டு 10க்கு 10 என்கிற அளவில் நினைவுத்தூண் அடிப்பகுதி ஆரம்பித்து 4க்கு 4 என்கிற அளவில் முடிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவுத்தூண் மேற்பகுதியில் நான்குமுக வடிவ சிங்க உருவ சிலை அமைக்கப்பட்டன. அதற்கு மேல் அசோக சக்கரம் வைக்கப்பட்டுள்ளது. நினைவுத்தூணின் மொத்த உயரம் தரை மட்டத்தில் இருந்து 59 அடி. மேலும், நினைவுத்தூணை சுற்றி நாட்டின் எல்லை பாதுகாப்பில் அரும்பாடுபட்டு வரும் ராணுவத்தினரை போற்றும் விதமாக நான்கு ராணுவ வீரர்களின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோபுரம் பதித்த தமிழ்நாடு முத்திரை நினைவுத்தூணின் முன்புற நடுப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. பின்புறத்தில் 75வது சுதந்திர தினத்தை குறிப்பிட்டு பொறிக்கப்பட்டிருந்தது. பணி தொடங்கி சரியாக 10 நாட்களில் 59 அடி உயரம் கொண்ட நினைவுத்தூண் அமைக்கும் பணி முழுவதுமாக முடிக்கப்பட்டன. இந்த நினைவுத்தூணை நேற்று காலை 10 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, பொன்முடி, தங்கம் தென்னரசு, காந்தி, கீதாஜீவன், சாமிநாதன், மகேஷ் பொய்யாமொழி, எம்எல்ஏ உதயநிதி மற்றும் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் சந்தீப் சக்சேனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்….

The post 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 59 அடி உயர நினைவுத்தூண் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : 75th Independence Day ,G.K. Stalin ,Chennai ,Kamarajar Road ,Sivananda Road ,B.C. ,Dinakaran ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...